பகைவனை வெல்லச் சிறந்த வழி

பகைவனை வெல்லச் சிறந்த வழி

 

 

மாசிடோனியாவின் மன்னரான ஃபிலிப் கி.மு.382 முதல் 332 வரை வாழ்ந்த, சரித்திரப் புகழ் பெற்ற அலெக்சாண்டரின் தந்தை என்று மட்டுமே பலர் அறிவர். ஆனால் அவருடைய சிறந்த குணங்களை கீழ்க்கூறவிருக்கும் நிகழ்ச்சி மூலம் அறியலாம். மிகவும் பலம் பொருந்திய மன்னராக விளங்கிய ஃபிலிப் அறிவாற்றலிலும் சிறந்து விளங்கினார். தன் மகனும் தன்னைப் போல் திகழ வேண்டும் என்பதற்காக அரிஸ்டாடில் என்ற புகழ் பெற்ற தத்துவ மேதையை அவனுக்கு ஆசிரியராக நியமித்திருந்தார்.
அவருடைய சாம்ராஜ்யத்தில் வசித்து வந்த ஒரு சிறிய ஜமீன்தாரான ஆர்க்கீடியஸ் என்பவர் மன்னரைப் பற்றி பலரிடமும் குறை கூறிக் கொண்டு திரிந்தார். இவ்வாறு அவர் செய்வது மன்னரின் செவிகளை எட்டியது. இது போன்ற குற்றங்கள் இராஜத் துரோகமாகக் கருதப்பட்டு வந்த காலம் அது.

ஒருமுறை மன்னர் அந்த ஜமீன்தார் ஆர்க்கீடியஸ் வசிக்கும் ஊருக்குச் சென்றிருந்தார். தன்னுடன் வந்த அரசாங்க அதிகாரிகளிடம், “ஆர்க்கீடியஸ் என்னிடம் பகைமை பாராட்டி வருகிறார். அதற்கு இன்று ஒரு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறேன்!” என்று சூளூரைத்துவிட்டு, ஆர்க்கீடியசை அழைத்து வர ஆள் அனுப்பினார்.

விஷயம் தெரிந்த ஆர்க்கீடியஸ் பதறிப் போனார். தனது இராஜத்துரோகத்திற்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அவருக்குத் தெரிந்தது. மரண தண்டனையே விதிக்கப்படலாம் என்று தோன்றியதால், தன் குடும்பத்தினரிடம் இறுதி விடைபெற்றுக் கொண்டு, மன்னரைக் காண வந்தார்.

ஆர்க்கீடியஸ் தன் அறையில் நுழைந்தவுடன், மன்னர் மற்ற அதிகாரிகளை வெளியே அனுப்பி விட்டு, தனிமையில் அவரை சந்தித்தார். சற்று நேரத்தில் மன்னர் விதிக்கப் போகும் கடும் தண்டனையை நிறைவேற்ற காவல் வீரர்கள் தயாராக வெளியே காத்திருந்தனர்.

வெகு நேரமானபிறகு ஒரு வழியாகக் கதவு திறந்தது. வெளியே வந்த மன்னரையும், ஆர்க்கீடியசையும் கண்ட மற்றவர்கள் திகைத்துப் போயினர். இருவரும் சிரித்துக் கொண்டே கை கோர்த்துக் கொண்டு தோழமையுடன் வந்ததுதான் காரணம்! தன் அதிகாரிகளில் ஒருவரை அழைத்து ஆர்க்கீடியசுக்குப் பரிசுகள் கொடுத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மன்னர் உத்தரவிட்டதும், யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

“மகாராஜா? பகைவனை இன்றோடு ஒழித்துக் கட்டுவேன் என்று சொன்னீர்கள் அல்லவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

“ஆமாம்! நான் சொன்னபடியே பகைவனை ஓழித்துக் கட்டி விட்டேன்!” என்ற மன்னர் தொடர்ந்து, “பகைவனை ஒழித்தது மட்டுமன்றி அவனிடத்தில் ஒரு புதிய நண்பனையே உருவாக்கி விட்டேன்! ஆர்க்கீடியஸ் ஒரு நல்ல மனிதர். என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டிருந்ததால் என் மேல் பலரிடமும் புகார் கூறிக் கொண்டிருந்தார். இன்று அவரிடம் நேரில் பேசி எங்களுக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகளைப் போக்கி விட்டேன். என்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொண்டவுடன்,அவருக்கு என்னிடமிருந்த பகைமை நீங்கி நட்பு தோன்றி விட்டது” என்றார்.

தொடர்ந்து, “பகைவனை அழிப்பது என்றால் பகைமையை அழிப்பது என்றுதான்; பகைவனைக் கொல்வதல்ல! அப்படிச் செய்வதால் பகைமை அழியாது, தொடரும்!” என்றார். மன்னரின் விளக்கம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

ஒரு பகைவனை வெல்ல சிறந்த வழி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவனை அழிப்பதல்ல! மாறாக, அவனிடம் மனம் விட்டுப் பேசி, அவனை தனது நண்பனாக்குவதே என்று உலகத்தோருக்கு இதன் மூலம் மன்னர் எடுத்துக் காட்டினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s