கல்வி

         இறைவன் படைப்பில் ஒரு சிறு அங்கமாக விளங்குவது மானிட இனம். இம்மானிட இனம் சிறப்புற வாழக் கல்வி ஓர் அற்புத சாதனமாகத் திகழ்கிறது. கல்வித்தாகம் ஒவ்வொருவரின் உயிரோட்டத்திலும் ஊற்றெடுக்க வேண்டிய ஒன்றாகும். இம்மாபெரும் கல்விச் செல்வமானது அனைவரது வாழ்விற்கும் விடிவெள்ளியாக அமைந்து வருகின்றது என்றால் மிகையாகாது. கண்களுக்கு நிகராகப் போற்றப்படும் கல்வியைக் கற்பதன்வழி, ஒரு மனிதன் தன் வாழ்வைச் சீர்படுத்திக் கொண்டு செம்மையாக வாழலாம்.

      உயிர் உடலில் இருந்து பிரிந்தாலும் ஒரு மானிடன் வாழ்ந்த வாழ்வை இவ்வுலகம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கும். அப்பேச்சு, தூற்றும் வகையில் அமைவதும் போற்றும் வகையில் அமைவதும் ஒருவர் கடைப்பிடித்த வாழ்க்கை நெறியைப் பொறுத்துள்ளது. இவ்வாழ்க்கை நெறி கல்வியின் மூலமே பெறப்படுகிறது. கல்வியானது பண்பு நிறைந்த குமுகாயத்தை உருவாக்கும் வல்லமையைக் கொண்டது. கல்விவழி அன்பு, பணிவு, கருணை போன்ற உயர்ந்த குணங்கள் ஒருவரது ஆழ்மனதில் கலந்துவிடும். அதோடு கல்வி கற்ற ஒரு மானிடனால் நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து நடக்க இயலும். இதனால், கல்விமானாகத் திகழும் ஒவ்வொரு மனிதனும் என்றும் மாசற்றவர்களாகத் திகழ்வர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

         மேலும், கல்வித் தென்றலில் உலாவரும் ஒவ்வொரு மனிதனும், மதிப்பும் மரியாதையும் பெற்றுப், புகழின் சிகரத்தை அடைவான் என்பது நாமறிந்த ஒன்றே. கல்வி ஞானம் பெற்ற ஒருவரின் பேச்சும் ஆலோசனையும் மட்டுமே உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்வில் செயல்படுத்தப்படுகின்றது. ஏனெனில், கற்றவரின் கருத்து என்றும் வளமானதாகவும் வலுவானதாகவும் இருக்கும். கற்றவர்கள் எவ்வித சிக்கல்களையும் தங்கள் அறிவால் சுமூகமாக நிவர்த்திச் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பர். அதோடு, கற்றவர்கள் எவ்வித சூழ்நிலைகளிலும் தன்னடக்கத்துடன் செயல்படுவர். இதுபோன்ற சிறந்த தன்மைகளைக் கொண்டிருப்பதால் கற்றவர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கப்படுவர் என்பதைக் ‘கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் முதுமொழி விளக்குகின்றது.

      கல்வி என்னும் அமுதச் சுரபியைப் பெறும் ஒவ்வொரு மானிடனும் தனது பொது அறிவை வளர்த்துக் கொள்ள இயலும். கல்வி கற்கும் பொழுது நாம் அதன்வழி பல தகவல்களை அறிகின்றோம். இத்தரணி தோன்றியது முதல் மனிதன் வளர்ச்சி அடைந்த காலம் வரை உள்ள தகவல்களை நாம் கல்வியின் வழி கற்றறியலாம்.

                                                  தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

                                                                         கற்றனைத் தூறும் அறிவு

 என்னும் குறளுக்கேற்ப கல்வி கற்கக் கற்க நமது அறிவு முதிர்ச்சி அடைந்து நாம் ஒரு சிறந்த

 அறிவாளியாக உருவாகலாம். பல தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பவனே உலகமயச் சுழற்சியில் மற்ற

 இனத்தோடு, நாட்டோடு சரிசமமாகப் பீடுநடை போட முடியும்.

      அதுமட்டுமின்றி, கல்வி ஒரு மனிதனுக்கு நல்லதொரு வேலை வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது. தொடக்கநிலை, இடைநிலைக் கல்வியில் சிறந்த தேர்ச்சி அடைந்தால், உபகாரச் சம்பளத்தோடு கூடிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இவ்வரிய வாய்ப்பினை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு நமது அரசாங்கமும் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நல்லாதரவு நல்கி வருகின்றனர். இதன்வழி, பல்வேறு வேலை வாய்ப்புகளைச் சிக்கலின்றிப் பெற்று வெற்றியடைய இயலும். தொடர்ந்து நல்ல கல்வித்தகுதி உடைய ஒருவர் நிறைந்த வருமானத்துடன் சிறந்ததொரு வேலையை எதிர்ப்பார்க்கலாம்.   இதுபோன்ற வேலை வாய்ப்பினால் நம் வாழ்வு சீரும் சிறப்புடனும் திகழும்.

      கற்றவன் நிறைகுடத்தைப் போன்றவன். கல்லாதவன் அனைத்து விதத்திலும் குறைகுடமாகவே திகழ்வான். கல்வி கற்காதவனிடம் பல தீய குணங்கள் மிக விரைவில் தொற்றிக் கொள்ளும். ஏனெனில், அவர்களுக்குப் பகுத்தறியும் தன்மை குன்றியே காணப்படும். மாசற்ற மழை நீர் செம்மண்ணில் விழுந்து தூயத்தன்மையை இழப்பது போல் ஒரு நல்ல மனிதனும் கல்வி கற்காவிட்டால் மிக விரைவில் தீய குணங்களுக்கு அடிமையாகிச் சீரழிந்து விடுவான்.

       கல்வி ஒரு சமுத்திரத்தைக் காட்டிலும் பெரியதாகும். வாழ்க்கை என்ற சிகரத்தை அடைய கல்வி என்ற தூண்டுகோள் அவசியமாகும். கல்வி கற்காதவன் உலக மக்களால் தற்குறி என்று கூறப்படுவான். ஆகவே, முழுமையான கல்வி கற்றுச் சிறப்பான வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s