நூலகம்

‘கண்டதைக் கற்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது நம் மூதாதையர்கள் கூறிய அருங்கருத்துகளில் ஒன்றாகும். அவர்களின் அருள்வாக்கு நூற்றுக்கு நூறு உண்மையே. நாம் பலதரப்பட்ட நூல்களைக் கற்பதன் மூலம் சிறந்த அறிஞர்களாகலாம். ஆனால், இன்றைய காலத்தில் சந்தையில் விற்கப்படும் அனைத்து வகையான நூல்களையும் ஒருவரே வாங்கக் கூடியதென்பது சாத்தியமாகக்கூடிய காரியமா? ஆகவே, இவ்வாறான சிக்கல்களைக் களைவதற்குச் சிறந்த வழி நூலகம் அமைக்கப்படுவதே ஆகும். இந்த நூலகங்களுக்குச் சென்று பலதரப்பட்ட எழுத்துப் படிவங்களை வாசிப்பதால் நிறைய பலன்கள் நம்மை வந்து சாறும் என்பது வெள்ளிடைமலையாகும்.

 நூலகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தகுந்த பல தரப்பட்ட புத்தகங்கள் ஆங்காங்கே சீராகப் பேழையில் அடுக்கி  வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாகச், சிறுவர்களுக்கான வண்ணப்படங்கள் கொண்ட கதைப் புத்தகங்கள், தொடக்க, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்கள், அரசாங்கத் தேர்வுக்கான மீள்பார்வை மற்றும் பயிற்சிப் புத்தகங்களும் முறையே வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பொது அறிவை வளர்ப்பதற்காக நாளிதழ்கள், வார மாத இதழ்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சிய நூல்களும் நூலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு சீராக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் நூலகத்திற்கு வருவோரைக் கவரும் வண்ணத்தில் இருக்கும். இன்றைய பெரும்பாலான நூலகங்களில் கணினி, நகல் எடுக்கும் கருவி, பாட நூல் சம்பந்தப்பட்ட ஒலி ஒளி நாடாக்கள் போன்ற வசதிகளும் இருக்கின்றன. மேலும் அமைதியான சூழலில் புழுக்கமில்லாமல் ஆழ்ந்து படிப்பதற்கு இன்றைய நூலகங்கள் குளிர்சாதன வசதிகளைக் கொண்டு விளங்குகின்றன.

 நூலகங்களுக்குச் செல்வதன் மூலம் நாம் பலவகையான நன்மைகளை அடைகிறோம். அரசாங்கத் தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் அவசியம் நூலகத்தை உற்ற தோழனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தங்களின் மனத்தை ஒருநிலைப்படுத்த அமைதியான சூழலில் புத்தகங்களை ஆழ்ந்து படிப்பதன் மூலம் கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொள்வர். இதற்கு முக்கியக் காரணம் நூலகத்தில் கிடைக்கக்கூடிய அமைதியான சூழலே ஆகும். இதுபோன்ற அமைதியான சூழலை நாம் வேறெங்கும் பெற இயலாது. இது தேர்வினை எதிர்நோக்கும் மாணவர்கள் தங்கள் எண்ணங்களை அலைபாய விடாமல் இருக்க வழிவகுக்கிறது.

 காலம் பொன் போன்றது என்பதனை நாம் அனைவரும் உணர வேண்டும். நாம் பயனற்ற வழியில் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் மீண்டும் வரப்போவதில்லை. ஆகவே இன்றைய இளைஞர்கள் தங்களது நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க நூலகம் பெரிதும் துணைபுரிகிறது. அதாவது அவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை நூலகத்தில் செலவிடுவதால் சமூகச்சீர்கேடுகளிலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக்கொள்ள முடிகிறது. இதன்வழி நாம் நம் நாட்டில் பெருகிவரும் வன்முறை, குண்டர் கும்பல், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற சமூகச்சீர்கேடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். இது நம் எதிர்காலத் தலைமுறையினர் கற்றவர்களாகவும் ஒழுக்கத்தில் ஓங்கியவர்களாகவும் திகழ வழி வகுக்கும் என்பது திண்ணம்.

 அதுமட்டுமல்லாமல் நூலகங்களில் உள்ள வார, மாத இதழ்கள் சஞ்சிகைகள் மற்றும் கலைக்களஞ்சிய நூல்களைத் தினமும் கற்பதன் மூலம் நாம் உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளைச் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். இதனால், நாம் கிணற்றுத் தவளை போல் இல்லாமல் வெளியுலகம் அறிந்தவர்களாகத் திகழ்வோம். ‘கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்பதுபோல நாம் வாசிப்பதன் மூலம் நமக்குத் தெரியாத பல விவரங்களைத் தெரிந்து கொள்வதோடு  நம்முடைய வாசிப்புப் பழக்கத்தையும் வலுவடையச் செய்து கொள்ளலாம்.

 எனவே, நாம் வயது வரம்பின்றி நூலகத்திற்குச் சென்று அங்குள்ள பல எழுத்துப் படிவங்களை வாசித்துப் பலனடைய வேண்டும். அரசாங்கம் பொது மக்களின் வசதிகளுக்காக நிறுவப்பட்ட நூலகங்களில் உறுப்பினர்களாகி அங்குள்ள சலுகைகளை நல்வழியில் பயன்படுத்திக்கொள்வது நமது அனைவரின் கடமையாகும். ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பதுபோல நாம் கற்றவர்களாக இருந்தால் எங்குச் சென்றாலும் மதிப்புப்  பெற்றுச் சிறப்புடன் வாழலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s