நோயற்ற வாழ்வு

ஆண்டவனின் படைப்பில் நோயற்ற வாழ்வு வாழும் மானிடனே இல்லையென்று அறுதியிட்டுக் கூறலாம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது எனக் கூறுவர். கல்வி, செல்வத்தை மட்டும் சேர்த்து வைத்திருந்தால் போதாது; அதற்கேற்ற உடல் நலமும் இருந்தால்தான் அவையனைத்தையும் அனுபவிக்க முடியும்.

‘சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்பதற்கொப்ப நலமான வாழ்க்கையைப் பெற்றிருந்தால்தான் நினைத்ததைச் சாதிக்க இயலும். நோயால் பீடிக்கப்பட்ட ஒருவரால் தான் சாதிக்க நினைத்ததை நிறைவேற்ற முடியாமல் போகிறது. அதற்கேற்ற வலுவும் மனோதிடமும் அவர்களிடம் இல்லாததே இதற்குக் காரணமாகும். அவர் எவ்வளவுதான் செல்வந்தனாக இருந்தாலும் எவ்விதப் பயனுமில்லை.. ஏனென்றால், அந்நோயைக் குணப்படுத்துவதற்காகவே அதிகமான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது’ என்பது போலச் சிரமப்பட்டுச் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் இவ்வாறு செலவிடுவது வருந்தத்தக்க ஒன்றாகும்.

நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்குப் பல சிறந்த வழிகள் இருந்தாலும் சிலர் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் நகை, உடை, சொத்துச் சேகரிப்பதிலேயே தங்களின் நேரத்தைச் செலவிடுகின்றனர். ஆனால், உடல் நலத்திற்கு வேண்டியதைத் தேர்வு செய்ய மறந்து விடுகின்றனர். உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்றால் அது மிகையாகாது. நமது உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளையும் சமசீராக உட்கொள்வது அவசியமாகும். அதுமட்டுமல்லாமல், அவ்வுணவைத் தகுந்த நேரத்தில், ஏற்ற அளவில் உட்கொள்வதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

நோயற்ற வாழ்க்கைக்கு உடற்பயிற்சியும் இன்றியமையாததாகும். ‘ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார் உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் சுறுசுறுப்பாகவும் மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர, உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உண்மையாகும்.

நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு நன்னெறிப் பண்புகளும் வகை செய்கிறது. நாம் வாழ்க்கையில் நன்னெறிகளைக் கடைபிடித்தால் எந்த நோய் நொடியும் இல்லாமல் நலத்தோடு வாழலாம். புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவை நமது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று அறிந்தும் பலர் இன்னும் அப்பழக்கங்களைக் கைக்கொண்டு வருகின்றனர். இவ்வுலகில் நாம் மக்களாய்ப் பிறந்தது, நாம் முப்பிறவியில் செய்த நல்வினையின் கூட்டுப்பலனேயென்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆகவே, சிந்தனை, செயல், வாக்கு இம்மூன்றையும் தூய்மையாக வைத்திருப்பதால் நம் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இதனால், நாம் நோயற்ற வாழ்க்கையை வாழலாம்.

நோயற்ற வாழ்விற்குச் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் அவசியமாகும். நாம் சுற்றுப்புரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதால், வியாதிகள் நம்மை அணுகா. வீட்டின் உள்ளும் புறமும் சுத்தத்தைப் பேண வேண்டும். நோய்க்கிருமிகளை உண்டாக்கும் கொசு, ஈ, எலி, கரப்பான்பூச்சி போன்றவ நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீடு மட்டுமல்லாது, நாட்டின் தூய்மையையும் பேண வேண்டும். குப்பைகள், புட்டி, நெகிழி போன்றவற்றைக் கண்ட கண்ட இடங்களில் வீசக்கூடாது. நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் மிக மிக அவசியம்.

ஆகவே, ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, கூன், குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அதைவிட அரிது’ என்று அவ்வையார் பாடியது போல, நாம் எக்குறையும் இல்லாமல் பிறந்திருக்கிறோம். அதனால், நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நமது கடமையாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s